முதலில் கோழியா முட்டையா வந்தது?

11:35 PM 0 Comments

இந்த உலகில் நாம் எவ்வளவோ கேள்விகளுக்கு இன்னும் பதில்களே கிடைக்காமல் இருக்கின்றோம். உதாரணத்திற்கு: விண்வெளியில் எங்கேயாவது அன்னிய உயிரினங்கள் (ஏலியன்) இருக்கின்றனவா? இந்தப் பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது? பூமியில் எவ்வாறு உயிர்கள் தோன்றின? இப்படி அளவுக்கும் அதிகமான கேள்விகளுக்கு இன்று வரை பதில்கள் கிடைக்கவில்லை. இப்படித் தான் என்னையும் கொஞ்ச நாளாக ஒரு கேள்வி போட்டு உறுத்திக் கொண்டே இருந்தது. உண்மை சொல்லப்போனால் அந்தக் கேள்வி என்னை மட்டும் இல்லை, இந்த உலகில் பலரை ஆட்டி வைத்த கேள்வி ஆகும்! இப்போ அந்த கேள்வியையும் அதன் பதிலையும் தருகிறேன். அது வேறு ஒன்றுமே இல்லை, நண்பர்களே… 

முதலில் கோழியா அல்லது முட்டையா வந்தது? 

இது என்னடா கேள்வி என்று என்னிடம் கேட்பவர்களுக்கு, இந்த கேள்வியில் இருக்கும் சிக்கல் புரியவில்லை என்று தான் சொல்லலாம்! அது என்ன சிக்கல் என்றால்: ஒரு கோழிமுட்டை ஒரு கோழியில் இருந்து வருகின்றது என்று எடுத்துகொள்வோம். அப்படி என்றால், அந்த கோழிமுட்டை இட்ட கோழி எதில் இருந்து வந்தது? அதுவும் ஒரு கோழிமுட்டையில் இருந்து தானே வந்திருக்கவேண்டும்? அப்போ அந்தக் கோழி இருந்த கோழிமுட்டை எதில் இருந்து வந்திருக்கும்…? இப்படியே தொடர்ந்து கேட்டுக்கொண்டே போகலாம். எனவே, முதலில் எது வந்தது? கோழியா இல்லை கோழிமுட்டையா? இதற்கு அறிவியல் ரீதியான பதில் என்ன? 

சரி, கோழி தான் முதலில் வந்தது என்று எடுத்துக்கொள்வோம். ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தது என்னவென்றால் கோழிமுட்டையின் கோது உருவாக்குவதற்குத் தேவைப்படும் OV-17 எனும் புரதம் கோழியில் மட்டும் தான் கிடைக்கிறது என்று. எனவே ஒரு கோழி இருந்தால் மட்டும் தான் அது OV-17 ஊடாக முட்டைக் கோதும் அத்துடன் கோழிமுட்டையையும் இட முடியும். எனவே, கோழி தானே முதலில் வந்து முட்டையை இட்டது? ஹ்ம்ம்ம்ம்… சரி, இதே விடயத்தை வேறு மாதிரி சிந்தித்துப் பார்ப்போம். முட்டை தான் முதலில் வந்தது என்று எடுத்துக்கொள்வோம்.  பொதுவாக இனப்பெருக்கத்தின் போது இரு உயிரினங்களின் டி.என்.ஏ (DNA) மூலக்கூறுகள் இரட்டித்துப் பெருகி சந்ததிகளுக்குக் கடத்தப்படுகிறது. இதில் கவனிக்கவேண்டியது என்னவென்றால், அப்படி இரட்டித்துப் பெருகும் போது, அந்த டீ.என்.ஏ. சில சமயங்களில் முழுவதும் இரட்டிப்பதில்லை. அது சிறிய மாற்றங்களுடன் இரட்டிப்பதைக் காணலாம். இப்படி ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் ஒரு உயிரினத்தின் டீ.என்.ஏ. மாறுபட்டுத் தான் புதிய புதிய உயிரினங்கள் உருவாகின்றன. எனவே, முன்னொரு காலத்தில் வாழ்ந்த கோழி போன்ற ஓர் உயிரினத்தின் டீ.என்.ஏ. மாற்றமடைந்து தான் இன்று எமக்கு தெரிந்த கோழியினம் உருவாகியிருக்கிறது. சரி, அந்த முன்னொரு காலத்தில் வாழ்ந்த கோழி போன்ற உயிரினத்திற்கு ஒரு பெயர் வைக்கலாம். அதை முற்கோழி என்று அழைப்போம். எனவே, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக முற்கோழிகள் இடும் முட்டைகளில் டீ.என்.ஏ. மாற்றம் அடைந்து, கடைசியில் அந்த முட்டையில் இருந்து நாம் இன்று காணும் கோழி வெளியே வந்து விட்டது. அப்படிப் பார்த்தால், முதலில் வந்தது முட்டை தானே? 

என்ன… குழப்பமாக இருக்கிறதா? இருக்கட்டும்…! 

முட்டை பற்றி இவ்வளவு சொல்கிறேனே, ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விடயம் ஒன்று இருக்கிறது. உண்மையில் கோழிமுட்டை என்பது என்ன? ஒரு கோழி இடும் முட்டையையா கோழிமுட்டை என்கிறோம், அல்லது ஒரு முட்டைக்குள் கோழி இருந்தால் தானா அதைக் கோழிமுட்டை என்கிறோம்? என்ன புரியவில்லையா? சரி, இப்படிப் பார்ப்போம். ஒரு குரங்கு முட்டை இடுகிறது என்று எடுத்துகொள்வோம். அந்த முட்டையில் இருந்து ஒரு யானை வெளியே வந்தால், அந்த முட்டையைக் குரங்குமுட்டை என்று அழைப்போமா, அல்லது யானைமுட்டை என்று அழைப்போமா? இப்போ வித்தியாசம் புரிகிறதா…? 

சரி, நான் ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கு சரியான பதில் கிடைப்பதற்கு இந்தப் பிரச்சனையை இரு பார்வையில் பார்க்கவேண்டும்: 

முதலாவது பார்வை: முன்னொரு காலத்தில் முற்கோழிகள், முற்கோழிமுட்டைகளை இட்டன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் டீ.என்.ஏ. மாற்றம் அடைந்து முற்கோழிகள் இட்ட முற்கோழிமுட்டையில் இருந்து ஒரு கோழி வெளியே வந்து விட்டது. அப்படி வந்த கோழி கோழிமுட்டையை இட்டது. எனவே, அந்தக் கோழி, முற்கோழிமுட்டையில் இருந்து வெளியே வந்த காரணத்தால், கோழி தான் கோழிமுட்டைக்கு முதலில் வந்தது. 

இரண்டாவது பார்வை: முன்னொரு காலத்தில் முற்கோழிமுட்டை இட்ட முற்கோழி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னர் கோழிமுட்டை இட்டு அதில் இருந்து கோழி வெளியே வந்து விட்டது. எனவே, அந்தக் கோழி கோழிமுட்டையில் இருந்து வெளியே வந்த காரணத்தால் கோழிமுட்டை தான் முதலில் வந்தது. 

இந்த இரு பார்வைகளையும் மிக அவதானமாகக் கவனித்தீர்கள் என்றால் இதில் இருக்கும் ஒற்றுமை புரிந்துவிடும்! கடைசியில் வருவது கோழி தான்! அதில் எந்த விதமான மாற்றுக்கருத்தும் இல்லை! முதலாவது பார்வையில் முற்கோழிமுட்டையில் இருந்து கோழி வருகிறது. இரண்டாவது பார்வையில் கோழிமுட்டையில் இருந்து கோழி வருகிறது. இரண்டிலுமே முட்டையில் இருந்து தான் கோழி வந்திருக்கிறது! எனவே நான் ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கு அறிவியல் ரீதியான பதில் இது தான்: 

கோழிக்கு முதல் முட்டை தான் வந்தது!!! 

பதில் தெரிந்துவிட்டது தானே? வாங்க எல்லோரும் போய் இப்போ ஒரு ஆம்லெட் சாப்பிடலாம்! இந்த தகவல் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள், நண்பர்களே!

0 comments: