உயிரை வாங்கும் கைப்பேசிகள்...
சமீப காலமாக விபத்துகள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. நேர்த்தியான சாலை உள்பட கட்டமைப்பு வசதிகள் இல்லாதது ஒரு காரணமாக இருந்தாலும், விபத்துகளுக்கு இன்னும் இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று, போதையில் வாகனம் ஓட்டுவது, இன்னொன்று வாகனம் ஓட்டும் போது செல்போனில் பேசுவது. இவற்றை தடுக்க போக்குவரத்து போலீசார் அவ்வப்போது கடும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். ஆனால், தொடர்ச்சியான நடவடிக்கைகள் இல்லாததால், வாகனம் ஓட்டுபவர்களும் மீண்டும், மீண்டும் தவறு செய்கின்றனர்.
சென்னையில் போதையில் வாகனம் ஓட்டியதாக கடந்த 2 மாதங்களில் 749 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. இது போலீசாரால் காட்டப்பட்ட கணக்குதானே தவிர, உண்மை நிலவரம் அல்ல. சிக்கியவர்கள் 749 பேர். சிக்காதவர்கள் எண்ணிக்கை இதை விட பல மடங்கு இருக்கும்.
அதே போல், செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. போதையில் வாகனம் ஓட்டுவதை விட ஆபத்தானது செல்போன் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டுவது. செல்போன் பேச்சு, ஓட்டுபவரின் கவனத்தை முழுக்க, முழுக்க சிதறடித்து விடுவதால், எளிதில் விபத்தில் சிக்குகிறார்கள். ஆனாலும், இந்த விபரீதம் தெரியாமல் பலர் தவறு செய்கின்றனர். அதிலும், போலீசாரின் கண்ணில் மண்ணை தூவுவதற்காக புது டெக்னிக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஹெல்மெட்டுக்குள் செல்போனை மறைத்து வைத்து கொண்டு, அதில் பேசியபடி வாகனம் ஓட்டுகிறார்கள்.
சென்னையில் ஒரு பெண்ணின் உயிரையே செல்போன் பறித்துள்ளது. வளசரவாக்கத்தை சேர்ந்த கிறிஸ்டினா என்ற பெண், வீட்டின் மொட்டை மாடியில் தடுப்பு சுவர் மீது உட்கார்ந்தபடி செல்போனில் பேசியிருக்கிறார். எதிர்பாராதவிதமாக அவரது கையில் இருந்து செல்போன் தவறி கீழே விழுந்தது. கிறிஸ்டினா அதை பிடிக்க முயன்றபோது, நிலைதடுமாறி கீழே விழுந்தார். 4வது மாடியில் இருந்து விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
செல்போனில் பேசும் போது அவர் தடுப்புச் சுவரில் உட்கார்ந்திருக்கக் கூடாது. பேச்சில் அவர் கவனம் திரும்பியதால், ஆபத்தான இடத்தில் உட்கார்ந்திருப்பதை அவர் உணரவில்லை. அதனால்தான் செல்போன் தவறும் போது அவரும் நிலை தடுமாறியிருக்கிறார். இதே போல்தான், வாகனம் ஓட்டும்போது நம் கவனம் முழுக்க திரும்பி விடும். வாகன ஓட்டிகள் இதை உணர வேண்டும். செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். போலீசாரும் இவ்விஷயத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 comments:
Post a Comment